Monday 25 July, 2011




கேள்வி: நவீன கால கட்டத்தில் காதல் திருமணம் செய்து கொள்வது தவறா? தன் மனம் இசைந்த மணமகனுடன் வாழ்க்கை நடத்துவதில் என்ன தவறு? இதற்காக மருமகனையே கொலை செய்வது என்ன நியாயம். குழந்தைகளை பெற்றோர்களின் கோர பிடியில் இருந்து காப்பது எப்படி?

பதில்: நீங்கள் அனுப்பிய பத்திரிகை செய்தியை நானும் பார்த்தேன். சற்று அதிர்ச்சியும் அடைந்தேன். கலீல் ஜிப்ரான் சொன்ன ஒரு வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது. "உங்கள் எண்ணங்களை உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்-ஏனென்றால் அவர்களுக்கான எண்ணங்களை தயார் செய்யும் பக்குவம் அவர்களுக்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், படித்த பக்குவம் நிரம்பிய, வயது வந்த ஆண்-பெண்களின் மன இயல்புகளை, அவர்களின் அந்தரங்க உண்மைகளை மனம் விட்டு பேசி நல்ல முடிவுகளை மேற்கொள்வது நல்ல தாய்-தந்தையரின் பண்பாகும். தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தடங்கல்களையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்துவோர் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியாது. கண்களை இழந்தபின் சித்திரம் வாங்க இயலாது. குழந்தைகளை இழந்தபின் பெற்றோர்கள் சாதிக்க எண்ணுவது என்ன என்பதே நம் கேள்வி.

மாணவர்களும் நல்லொழுக்கமும்




கேள்வி: இக்கால மாணவ மாணவிகள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று எண்ணுகிறீர்கள். வெளிநாடுகளில் காணப்படும் இந்த சீரழிவு கலாசாரம் நம் இளம் தலைமுறையையும் பற்றி கொள்வதன் ரகசியம் என்ன?

பதில்: இப்போதுள்ள தலைமுறைக்கும், பழைய தலைமுறைக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஹை-டெக் சாதனங்களின் துணையுடன் மேல் நாட்டு நாகரீகம் அல்லது கலாச்சாரம் நமது வீட்டு வரவேற்பறைகளிலும்,படுக்கை அறைகளிலும் எட்டி பார்க்க தொடங்கிவிட்டது. சேட் வசதிகளும்,ஐ போன் மற்றும் முழு அளவிலான இணையதள தகவல் பரிமாற்றங்களும் இளைனர்களை கட்டி போட்டுவிட்டன. பேஸ்-புக் ஒரு படி மேலே போய் புதிய நண்பர்களையும் அவர்களின் வாலிப சேட்டைகளையும் விலாவாரியாக அலசும் அரட்டை-அரங்கமாக மாறிவிட்டது. தனது குழந்தைகள் தனது ஒய்வு நேரத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை பெற்றோர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. காதல் பரிவர்த்தனைகளிலும், உல்லாச கேளிக்கைகளிலும் அதிக ஈடுபாடு கொள்வது இளைனர்களை பொறுத்த வரை ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நண்பர்கள் என்ற போர்வையில் ஆண்- பெண் நெருங்கி பழகும் தன்மை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இளைனர்களை தட்டி கேட்கும் நிலையில் தாய்- தந்தையரும் இல்லை. இந்த வரம்பு மீறல்களால் பாதிக்க படுவது பெண் குழந்தைகள் மட்டுமே. முறையான செக்ஸ் கல்வி பற்றி குழந்தைகளுக்கு இளமையிலேயே, அறிவுறுத்துவதும், பாதிக்கபட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிறந்த மருத்துவர்களை கொண்டு போதிப்பதும், நல்ல ஒழுக்க சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமும் இது போன்ற அவலங்களை தடுத்து நிறுத்த முடியும்.

Sunday 24 July, 2011

பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் கேள்வி-பதில்கள்.


கேள்வி :குழந்தையை வளர்த்து சீர் படுத்த வேண்டிய தாய்-தந்தையரே தவறான வழியில் நடந்தால் அது குழந்தைகளின் மனதை பாதிக்குமா?ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் யார் கைகளில் இருக்கிறது? தாயின் நடத்தையிலா அல்லது தந்தையின் நடத்தையிலா?

பதில்: ஒரு குழந்தை உருவாவதில் இருந்து வளர்ந்து வாலிபன் ஆகும் வரை தாயின் அரவணைபிலேயே வாழ விரும்புகிறது.தாய் காட்டும் அன்பும், பாசமும், பரிவும் குழந்தையின் வாழ்வில் தாய் பால் உடல் வளர்ச்சிக்கு உதவுவது போல், இவை மன வளர்ச்சிக்கு அடிப்படை நல்மருந்தாய் அமைகின்றன. தாயின் நன்நடத்தையே குழந்தைக்கு தாயின் பால் மதிப்பையும்,மரியாதையையும் பெற்று தர உதவி புரிகின்றன. தவறு செய்யும் தந்தையை சமுதாயம் குறை கூறினால் கண்டு கொள்ளாத மகன் தன் தாயை பற்றி எவரும் குறை கூறினால் பொங்கி எழுகிறான். காரணம் நமது சமுதாயம் தாயிக்கு மிகுந்த கௌரவத்தை வாரி வழங்குகிறது. தாயை தெய்வத்துக்கு இணையாக நமது சமூகம் கருதுகிறது. தவறு செய்யாதவர் தன் தாய் என்றே எந்த குழந்தையும் எண்ணுகிறது. கற்பு நெறியை தன் தாயிடம் மிகவும் அதிகமாகவே எதிர்பார்க்கிறது. அது தவறும் போது எந்த மகனாலும் இதை ஜீரணிக்க முடிவதில்லை. மகன் தவறு செய்தால் தாய் தடுக்கலாம் - தாயே தவறு செய்தால் யார் தடுப்பது. சில சூழ்நிலைகளில் குழந்தைகளே இதை சரி செய்கிறார்கள். தவறு செய்தவர் தாயாக இருந்தாலும் சரியே.



ஏமாற்றம் தரும் காதல்




கேள்வி: அழகான பெண்ணை பார்த்தால் காதல் வருமா அல்லது அந்தஸ்து, பணம்,புகழ், பதவி உள்ள பெண்ணை பார்த்தால் காதல் வருமா? காதலித்த நபரை கைவிடுவதில் கை தேர்ந்தவர் யார்? ஆணா-அல்லது பெண்ணா?

பதில்: காதலிப்பதில் ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. காதலிப்பது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. அதிக ஆண் அல்லது பெண் நண்பர்களை பெற்றவர்களே கல்லூரிகளில் 'ஹீரோ' வாக பவனி வருகிறார்கள். இந்த அந்தஸ்தை பெறுவதற்கு கல்லூரிகளில் கடும்போட்டியும் நிலவுகிறது. காதலிப்பவர் இடையேயும் போட்டியும்,பொறாமையும் நிகழ்கிறது. நீண்ட நாள் காதலர்கள் பிரிவதும், புதியவர்கள் அந்த இடத்தை நிரப்புவதும் காதலின் தூய்மையை கெடுத்துவிட்டது. 'காசிருந்தால் வாங்கலாம் - ஐயோ பாவம்', என்ற கண்ணதாசனின் கவிதைக்கு ஏற்ப காதல், தன் கண்ணியத்தை இழந்து தலைகுனிந்து நிற்கிறது. தூய்மை இல்லாத காதல் பெரும் தோல்விகளையே இப்போது சந்தித்து வருகிறது. சிலர் நீங்கள் குறிப்பிடுவது போல் அழகுக்காக காதலிக்கிறார்கள், பலர் பணத்திற்காகவும் காதலிக்கிறார்கள். வெகு சிலரே காதலுக்காக வாழ்கிறார்கள், அது கிடைக்காதபோது உயிரை இழக்கவும் தங்களை தயார் படுத்திகொள்கிறார்கள். தூய்மையான காதலர்கள், காதலிப்பவர்களை எக்காலத்திலும் கை விட மாட்டார்கள். வேறு துணையை நாடி ஓடமாட்டார்கள். வேறு வாழ்கை துணையை நாடுபவர்களை சட்டத்தாலோ அல்லது போலீசாலோ தடுத்தி நிறுத்த முடியாது. சட்டத்தை காட்டி பிடிக்காதவரை காதல் செய்ய வைக்கவோ அல்லது கட்டாய திருமணம் செய்து கொள்ள வைக்கவோ இயலாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் திருமணமும் பெற்றோர் நிலையும்




கேள்வி: காதல் திருமணம் புரிந்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மகளின் கணவனையே கொலை செய்து விடும் அளவுக்கு தாய்-தந்தையாரின் நெஞ்சம் கடினமாகி விடுமா? பெற்றோர் குறிப்பிடும் வரனை திருமணம் செய்தால் தான் 'பாசம்' நிலைக்குமா? இக்கால சூழ்நிலையில் தாய்-தந்தையர் எவ்வாறு நடந்து கொள்வது நன்று என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.

பதில்: காதல், திருமணம் வரை செல்கிறது என்றால் அதில் தெளிவான நோக்கம் இருக்கிறது என்று பொருள். அதுவும் மணம் புரிய விளையும் காதலர்கள் நன்கு படித்தவர்கள் என்றால், ஒரு நல்ல மணவாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு. நல்ல படித்த, பண்பான ஒருவன் தன் மகளுக்கு மணமகனாக வர வேண்டும் என்றே எந்த பண்புள்ள தாய்-தந்தையரும் விரும்புவர். நல்ல வரன்களை பிறர் அறிந்து சொல்வதை விட, மனம் ஒத்த வாழ்க்கை துணையை மகனோ அல்லது மகளோ தேர்ந்து எடுத்தால், அதை ஆராய்ந்து பார்த்து, தங்களின் குழந்தைகளின் எதிர்கால வளமான வாழ்வுக்கு, இது ஊறு விளைவிக்காது என்று அறிந்தால் அந்த திருமணத்தை உறுதிபடுத்துவதும் அதை முறையாக நடத்தி கொடுப்பதும் தான் இக்கால சூழலுக்கு பொருந்துவதாகும். விட்டு கொடுக்கும் மனபான்மையும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் தக்கவாறு தங்களின் கடின சித்தாந்தத்தை சற்று தளர்த்தி கொள்ளும் மன பக்குவமும் இக்கால பெற்றோர்களுக்கு அவசியம் தேவை. படித்த பெண்கள் கை நிறைய சம்பாதிக்கும் இன்றைய கால கட்டத்தில் அவர்கள் விரும்பும் வாழ்கை துணையை அவர்களுக்கு வழங்குவதில் எந்த தவறுமில்லை. பெற்றோர் தேர்ந்தெடுக்கும் வரன்கள் முழுவதும் வெற்றியில் முடிந்ததாக எந்த வரலாறுமில்லை. அதுபோலவே எல்லா காதல் திருமணங்களும் தோல்வியில் முடிந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த விசயங்களில் பெற்றோர் நிதானமாக யோசித்து, பொறுப்புடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். தவறான முடிவுகள் அனைவரது வாழ்க்கையையும் பாழ்படுத்தி விடும். குடும்ப அமைதியும், ஆனந்தத்தையும் கெடுத்துவிடும்.

பெண் குழந்தைகள் சந்திக்கும் கொடுமைகள்




கேள்வி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது ஏன்? இது மன நோயின் வெளிப்பாடா? இது போன்ற செக்ஸ் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பதில்: இந்த தகாத செயலை செய்யும் ஆண்கள் சில நேரங்களில் மன நோய்க்கு ஆட்படடவரகாவே இருக்கிறார்கள். தங்கள் மனைவியரை செக்ஸ் உறவில் திருப்தி செய்ய இயலாத ஆண்கள் தங்கள் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப சிறுமிகளை ஏமாற்றி, அல்லது பயமுறுத்தி, மனைவிகளிடம் அடைய முடியாத சில வேட்கைகளை தணித்து கொள்ள, குழந்தைகளை உறவுக்கு பயன்படுத்திகொள்கின்றனர். குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதவர்கள் என்பதாலும், இதை பற்றிய தெளிந்த அறிவு இல்லாமையாலும் இந்த கயவர்கள் இந்த பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த தவறை தொடர்ந்து செய்பவர்களை 'சோசியோபத்' அல்லது 'சைகோபத்' என்றே மனநல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தங்கள் இரையை மிகவும் லாகவமாக வேட்டையாடுவதில் வல்லவர்கள். குழந்தைகளுக்கு வேண்டிய மிகவும் நெருங்கிய உறவினர் அல்லது பாதுகாப்பு வழங்குவோரே தங்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை, தவறாக பயன்படுத்தி இந்த குழந்தைகளை வலையில் வீழ்த்தி சீரழித்து விடுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர் இது போன்ற உறவினர்களின் கைகளில் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்புக்காக விட்டு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். அப்படியே சில நேரங்களில் விட்டு போக நேர்ந்தாலும், வீடு திரும்பிய பின் நடந்த விசயங்களை பொறுப்புடன் பேசி கண்டறிய வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் தாயிடம் எல்லா உண்மை களையும் விரிவாக சொல்லி விடும். குறிப்பாக தேவை இல்லாமல் உடல் பாகங்களில் தொடுவது - தொட்டால் அதை தவிர்ப்பது போன்ற அத்தியாவசியமான ஒழுக்க நெறிமுறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதின் மூலம் இந்த சீரழிவில் இருந்து சிறு குழந்தைகளை காத்திட இயலும்.

Saturday 23 July, 2011

தாயின் பாசமும் மனைவியின் அன்பும்




கேள்வி: தாய் பாசம் என்றால் என்ன? தாய் காட்டும் இந்த பாச உணர்வை ஒரு மனைவியால் காட்ட இயலாதது ஏன்?

பதில்: ஒரு ஆணின் வாழ்வில் சில பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாய், சகோதரி, மனைவி மற்றும் மகள். தாய் பெற்றவள், சகோதரி உடன் பிறந்தவள். இது இரத்த உறவினால் ஆனது. எளிதில் பிரிக்க இயலாதது. மனைவியின் உறவு அவ்வாறு இல்லை. இது இரத்த உறவை அடிப்படையாக கொண்டு அமைவதில்லை. மருத்துவ ரீதியாகவே நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வது உகந்த செயல் அல்ல. இரத்த பந்தங்களுக்கு அப்பால் நிகழும் திருமண உறவு காதல் உணர்வை மாத்திரம் கொண்டு அமைவது.அன்பு எனும் பிணைப்பில் இணையும் உறவு இது. இதில் பாசத்திற்கு வழி இல்லை. ஆனால் மனைவி மூலம் பிறக்கும் குழந்தை இரத்த பந்தம் உள்ளது. எனவே மனைவி மட்டுமே ஒரு குடும்பத்தில் சற்று ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தான் விவாகரத்து என்பது மனைவியை மட்டும் குறி வைத்து நிகழ்த்தபடுகிறது. மனைவியை பிரிந்து வாழும் ஒரு மனிதனால் தன் தாயையும், தன் குழந்தையையும் பிரிந்து வாழ முடிவதில்லை. கணவன் இறந்தால் உயிர் விட துணியும் எந்த மனைவியும் நவீன உலகில் இல்லை. கணவன் இறந்தால் மகிழ்ச்சி அடையும் மனைவியரே இவ்வுலகில் அதிகம். இறந்த மகனின் இறப்பு ஒரு தாய்க்கு பேரிழப்பு தான். மகனே போனபின் வாழ்ந்து தான் என்ன பயன்?

காதலும் கொலை வெறியும்




கேள்வி: பழி வாங்கும் மன இயல்பு காதலர் மத்தியில் அதிகம் பரவுவதற்கு என்ன காரணம்? ஒருவரை காதலிப்பதும், பிடிக்காவிட்டால் வேறு ஒருவரை திருமணம் புரிவதும் தனிமனித சுதந்திரம். காதலனோ அல்லது காதலியோ விரும்பும் வகையில் அமையாவிட்டால் அதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த வேறு ஒருவரை மணப்பதில் என்ன தவறு. இதற்காக கொலை செய்ய துணிவது எந்த விதத்தில் நியாயம்?

பதில்: காதல் என்றால் என்ன? இந்த உணர்வை பற்றி ஒரு தெளிவான அறிவு இக்கால இளைனர்களுக்கு அவசியம் தேவை.ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் ஈர்ப்பு நிச்சயமாக காதல் ஆகாது. இந்த ஈர்ப்பு பெரும்பாலான இளைனர்களுக்கு ஏற்படுவது என்பது இயல்பான ஓன்று தான். இது காதலாக பரிணமிக்க சில காலம் ஆகலாம். இது தன் சுயநலம் கருதி தன் வாழ்க்கை துணையை தெளிவாக, திறமையாக தேர்வு செய்யும் ஒரு வழிமுறை என்று தான் சொல்ல வேண்டும். தற்கால இளைனர் சமுதாயம், சினிமாவை போன்று காதலையும் ஒரு வியாபார யுக்தியாகவே கையாள துவங்கி விட்டது. தனக்கு ஏற்ற வரன் பார்க்கும் வைபவமாகவே காதல் கொள்வதும் ஆகிவிட்டது. இதை ஊக்க படுத்தவே ஏராளம் இனைய தளங்களும் இப்போது வர துவங்கி விட்டன. காதல் செய்வதை இந்த இணைய வலைகள் மிகவும் எளிமை ஆக்கிவிட்டன. காதல் இப்போது தன் பரிசுத்த தன்மையை இழந்து வெகு காலம் ஆகிவிட்டது. காதலிப்பது, அதை படமாக்குவது,இணைய தளத்தில் வெளி இடுவேன் என்று பயமுறுத்துவது, மிரட்டுவது, பணம் பறிப்பது, தவறான தகவல்களை பரப்புவது, எதிர்த்தால் அல்லது வேறு ஒருவரை மணக்க இருந்தால் அல்லது மணமுடித்தால் கொலையும் செய்வது என்பது இப்போது சகஜமாகிவிட்டது. தூய காதல் இவ்வாறெல்லாம் செய்ய தூண்டாது.

கற்பழிப்பவன் ஒரு மன நோயாளியா?



கேள்வி: நெஞ்சை உலுக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் இப்போது அதிக அளவில் நடப்பதற்கு என்ன காரணம்? இளைய சமுதாயம் இவ்வாறு நெறி தவறி நடப்பது எதனால்? சினிமாவில் வரும் கற்பழிப்பு காட்சிகளின் தாக்கமா அல்லது அரை-குறை ஆடைகளுடன் தங்களின் உடம்பின் பெரும்பகுதியை ரசிகர்களுக்கு விருந்தாக்கி கவர்ச்சி காட்டும் நடிகைகளின் பெருந்தன்மையா?

பதில்: கவர்ச்சி காட்டுவதை பெருந்தன்மை என்று நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 'பெர்வெர்சன்' என்று வேண்டுமானால் இதை குறிப்பிடலாம். தமிழ் சினிமாக்களில் தற்போது வரும் காட்சிகள் சற்று மிகையாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமான செக்ஸ் தூண்டுதலும், அதை சற்றும் அனுமதிக்காத குடும்ப மற்றும் சமூக கட்டுபாட்டில் வாழும் இன்றைய இளைனர்கள் ஒரு வித இரண்டு-கெட்டான் சூழலில் வாழ்கிறார்கள். சினிமாவில் காணும் சில அவல நிகழ்சிகளை, நிஜ வாழ்விலும் அரங்கேற்ற துடிக்கும், உணர்சிகளை அடக்க இயலாத சில பொல்லாத இளைனர்களின் கீழ் தர செயல்பாட்டின் தாக்கமே இது போன்ற நிகழ்வுகள் நடக்க காரணமாகின்றன. சினிமாவை மட்டும் காரணமாக சொல்ல இயலாது. இன்டர்நெட், மொபைல் வசதிகள் இந்த வாய்பை மேலும் அதிகரிகின்றன. நல்ல குடும்ப அமைப்பும், பெற்றோர்களின் மேலான அரவணைப்பும், நல் ஆலோசனைகளும் , நல் ஒழுக்க பயிற்சிகளும் நல்ல ஆரோக்கியமான இளைனர் சமுதாயத்தை உருவாக்க பயன்பெறும். பெற்றோர்களின் பங்கு இந்த விசயத்தில் அத்தியாவசிய தேவையாகும்.

மொபைல் போனும் சந்தேகமும்




கேள்வி: எல்லா குழந்தைகளுமே இப்போது சர்வ சாதாரணமாக மொபைல் போன், இன்டர்நெட் வசதிகளோடு தான் வாழ்கிறார்கள். இது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு , அவர்களின் நண்பர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இப்போது அவர்களின் பெற்றோர்களிடம் மேலோங்கி வருகிறது. இதை இக்கால இளைஞர்கள் தங்களின் தனி அந்தரங்க வாழ்விலும், தனிமனித சுதந்தரத்திலும் பெற்றோர்கள் தேவைஇன்றி மூக்கை நுழைப்பதாக எண்ணுகிறார்கள். இதை நிவர்த்தி செய்வது எப்படி. இது விசயத்தில் பெற்றோரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.

பதில்: மாடேர்னாக மாறி வரும் இளம் தலைமுறை விசயத்தில் மிகவும் கவனமாகவும், லாகவமாகவும் நடந்து கொள்வதில் பெற்றோர்கள் அக்கறை காட்டவேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் மொபைல், கம்ப்யூட்டர் மூலம் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன், உங்களின் அனுமதி பெற்று தகவல்களை பரிமாற அனுமதி வழங்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் நெருங்கிய நண்பர்களை பற்றியும், அவர்கள் பரிமாறும் செய்திகள் பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள இயலும். உங்கள் மனதிற்கு கவலை தரும் செய்திகள் பரிமாற பட்டால் உங்கள் குழந்தைகளை பக்குவமாக நீங்கள் எச்சரிக்கலாம். இதற்காக அவர்களை கண்டபடி அடிப்பதும், திட்டுவதும்,வீண் சந்தேகம் கொள்வதும் எதிர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்தும். உங்கள் மீது அதிக கோபம் கொள்ளவும் வைக்கும். பெண் குழந்தைகள் விசயத்தில் நீங்கள் எடுக்கும் அவசர முடிவுகளால் அவர்கள் உயிர் இழக்கவும் நேரிடலாம். ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பெற்றோகள் காரணமாக இருக்க கூடாது என்பது என் எண்ணம்.

காதலும் பழிவாங்கும் உணர்வும்




கேள்வி: காதலிப்பது, அதை பெற்றோர் எதிர்ப்பது,பின் வேறு வரன் தேடுவது, இதை அறியும் காதலன் மணப்பெண்ணை கடத்துவது அல்லது கொலை செய்வது - இந்நிலை இப்போது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. சமூக பிரட்சினையகிவிட்ட இந்நிகழ்வுகளுக்கு தங்களின் ஆலோசனை என்ன?

பதில்: சமூக மாற்றங்கள் எல்லா குடும்பங்களையும் நேரடியாக ஆக்ரமிக்க துவங்கிவிட்டன. கடந்த பத்துஆண்டுகளாக சர்வமும் தலை கீழாக மாறி விட்டது.சினிமா,மொபைல்,இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்கள் இளைனர்களின் காதல் தாகத்தை மேலும் அதிகபடுத்திவிட்டன. காதலிக்கும் இளைனன் ஒரு விதமான 'பொசசிவ்' மனப்பான்மைக்கு அடிமையாகி விடுகிறான்.தான் காதலிக்கும் பெண் தனக்கே உரியவள் என்ற அபரிதமான நம்பிக்கை அவளையே மனைவியாக அடைய துடிக்கிறது. இது கை கூடாத போது பழிவாங்கும் எண்ணம் மேலோங்குகிறது. இதுவே காதலியை கொலை செய்யும் அளவுக்கு காதலனை தூண்டுகிறது. பெற்றோர்களின் நல்ல அரவணைப்பும், தனது குழந்தைகளை பற்றிய முழு விபரங்களையும், அவர்களின் நடத்தை பற்றிய பொதுவான செய்திகளை அவர்களின் நெருங்கிய நண்பர்களின் மூலம் அறிந்துகொள்வதன் மூலமும், தேவையான ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்குவது மூலமும் குழந்தைகளை ஓரளவு தங்களின் கட்டுபாட்டில் வைத்துகொள்ள ஏதுவாகும். தாய்-தந்தையரின் மேம்பாடான ஒழுக்கமும் இதற்கு மிகவும் அவசியம். நல்ல பெற்றோர்கள் கூட ஒரு விதத்தில் நல்ல ஆலோசகர்களே.

Friday 22 July, 2011

இளைனர்களும் காதல் தோல்விகளும்




கேள்வி: தேர்வில் தோற்றால் சாதாரணமாக சில தற்கொலைகள் நிகழும். இப்போது காதல் தோல்வி என்றால் கூட இளைனர்களும்,மாணவர்களும் அதிக அளவில் தற்கொலை செய்கிறார்களே இது ஏன்?

பதில்: சாதரணமாகவே எல்லா தோல்விகளுமே தற்கொலை எண்ணத்தை தூண்டத்தான் செய்கின்றன.என்றாலும் காதல் தோல்விகளே அதிகம் தற்கொலைகளில் முடிகின்றன.காதல் தோல்விகள் மாணவிகளுக்கு மான பிரட்சினையாக இன்றும் இருப்பதால் அவமானம் தாங்காமல் தான் இந்த இளம் பெண்கள் தற்கொலையை நாடுகின்றனர்.சமுதாயமும் அவர்களை குற்ற நோக்கோடு தான் எடை போடுகிறது. பெற்றோர்களும், உறவினர்களும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், குறிப்பாக மாணவிகள் எதுவும் செய்ய இயலாமல் இந்த கோர முடிவை மேற்கொள்கின்றனர். சினிமா போதிக்கும் காதல் கருத்துகள் திரையில் பார்த்து ரசிக்க தக்கவையாக இருக்கிறதே தவிர, சமுதாய நிஜ வாழ்வுக்கு வாழ்த்துரை வழங்க தயாராக இல்லை. சினிமா கருத்துகளாலும், கதைகளாலும், காவியங்களாலும் தூண்டப்படும் இளம் மாணவ,மாணவியர், இந்த கொள்கை களை எல்லாம் வாழ்வில் கடை பிடிக்க வழியில்லாமல் ஒரு வித இரு மாறுபட்ட மன போராட்டத்தில் சிக்கி தடுமாறுகின்றனர். காதல் குறித்த அல்லது காதல் மணம் குறித்த பரந்த கருத்து பரிமாற்றங்களுக்கு, அது பற்றிய ஆக்க பூர்வமான விவாதங்களுக்கும் இளம் பெற்றோர்கள் முன் வந்தால் மாத்திரமே இது போன்ற காதல் தோல்விகளால் ஏற்படும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.

அதிக பணம் சம்பாதிப்பது கிரிக்கெட் வீரர்களா அல்லது படித்த பட்டதாரிகளா




கேள்வி:படித்து பட்டதாரிகளாகி சம்பாதிப்பதை விட சினிமாவிலோ அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலோ குழந்தைகளை ஈடுபடுத்தினால் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்,மேலும் அவர்களால் கை நிறைய பணம் சம்பாதிக்க இயலும் என்று சொல்கிறார்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகம் படிக்காத, மற்றும் பட்டங்கள் எதுவும் பெறாத கிரிக்கெட் வீரர்கள் கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பதை பற்றி நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.இது உண்மை தான். நான் மறுக்கவில்லை. எல்லா மாணவர்களும் கிரிக்கெட் வீரர்களாகவும்,நடிகர்களாகவும் ஆகி விட்டால் இவர்கள் விளையாட்டை பார்த்து ரசிக்க ஆள் கிடைக்கமாட்டார்கள். கிரிக்கெட், சினிமா போன்ற துறைகள் படிப்பை அடிப்படையாக வைத்து இளைனர்களை தேர்வு செய்வதில்லை. இந்த துறையை சேந்தவர்கள் அபாரமான பயிற்சி திறன் அல்லது திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது எளிய செயல் அல்ல. விளையாட்டில் திறமையை வெளிபடுத்துவது கூட ஒரு நுண்ணறிவுதான். 'மல்டிபிள் இன்டலிஜென்ஸ்' என்று அறிவை வகை படுத்தும் பிரிவில் விளையாட்டு திறனும் உண்டு. இது போலவே இசை ஞானம் உள்ளவர்கள் இசை மேதை களாகவும்,நடிப்பாற்றல் மிக்கவர்கள் சிறந்த நடிகர்களாகவும் தங்களை உருமாற்றி கொள்கிறார்கள்.இந்த ஆற்றல்களை பெற கல்வியறிவு அவசியம் இல்லை.வளரும் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்புவதை திணிக்காமல் ,அவர்கள் விரும்புபுவது எது என்பதை கண்டறிந்து அவர்களை அந்த துறைகளில் புகுத்தினால், அவர்கள் அந்த துறைகளில் நிபுணர்களாக மாற அதிகம் வாய்புகள் உண்டு.

தேர்வில் தோல்வியும் தற்கொலையும்




கேள்வி: பரீட்சையில் தோற்றாலோ அல்லது மதிப்பெண் குறைந்தாலோ இளம் மாணவர்கள் உயிரை மாய்ப்பது ஏன்? இந்த விபரீதத்தில் இருந்து இளைனர்களை காப்பது எப்படி?

பதில்: பெற்றோர்களும் சில நேரங்களில் ஆசிரியர்களும் இதற்கு காரணம் என்று சொல்லலாம். மார்க் குறைந்தால் திட்டுவது,கண் மூடித்தனமாக அடிப்பது என்பது இப்போதும் நிகழும் செயல் தான்.பெற்றோர் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்பது தான் அவர்கள் எடுக்கும் இந்த துயர முடிவுக்கு காரணம். ஆத்திரத்தில் குழந்தைகளை அடிப்பதையும், கொடூரமாக திட்டுவதையும் பெற்றோர்கள் கைவிட வேண்டும். இது ஒன்றும் பெரிய தவறல்ல,முயன்றால் அடுத்த தேர்வில் வெற்றி பெற இயலும் என்பதை நயமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்ட வேண்டும். இது குழந்தைகளின் பயத்தை நீக்கி தன்நம்பிக்கை வளர துணை புரியும். பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் தேர்வு நிகழ்வதற்கு முன் சிறந்த மன நல வல்லுனர்களை கொண்டு ஆலோசனைகளும்,நல்ல பயிற்சியும் வழங்கினால் இளம் மாணவர்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற இயலும்.

விவாகரத்தும் குழந்தைகளும்




கேள்வி: விவாகரத்து செய்து கொண்ட தம்பதியரின் குழந்தைகள் அதிக அளவு மன அழுத்தத்தால் பாதிக்கபடுவது ஏன்? இம்மாதிரி இக்கட்டான சூழலில் வாழும் குழந்தைகள் யாரின் அரவணைப்பில் வாழ விரும்புகிறார்கள். தாயின் அரவனைப்பிலா அல்லது தந்தையின் பாதுகாப்பிலா?

பதில்: சாதாரணமாகவே விவாகரத்து செய்த பெற்றோர்களின் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மைதான். தாய்- தந்தை உறவில் ஏற்படும் விரிசல் இளம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து ஆற இயலாத மன வடுக்களை கடுமையாக ஏற்படுத்தி விடுகிறது.இது படிப்படியாக வளர்ந்து பயத்தையும், சொல்ல இயலாத மன கலக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.இது பெற்றோர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கிறது.மெதுவாக குழந்தைகள் தங்கள் பாதுகாப்பின்மையை உணர துவங்குகிறார்கள்.பெற்றோர்கள் காட்டும் பாசம் போலியானது என்பதை உணரும் குழந்தைகள் ஏமாற்றத்தால் துவண்டு போய் விடுகிறார்கள்.தன்னை உண்மையில் பாதுகாப்பவர் எவர் என்பதை விரைவில் உணர்ந்து கொள்கிறார்கள்.அதன் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவே விவேகமானது. பிரச்சினைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை குழந்தைகள் மிகவும் சுலபமாக யூகித்து விடுகின்றன. இதன் பின்னரே யாரோடு வாழ்ந்தால் பாதுகாப்பு என்பதை அறிந்து அவரோடு முழுமையாக தன்னை இணைத்து கொள்கிறது குழந்தை.இந்த பத்திரிகை செய்தியின் படி மகன் தந்தையின் பாது காப்பில் வாழவிரும்புவது தெரிகிறது.அவன் தாயை வெறுப்பதும் புரிகிறது.

Thursday 21 July, 2011

ஆண்மைகுறைவும் இன்றய இளைனர்களும்



கேள்வி: ஆண்மைக்குறைவு என்பது இளைனர்களை தாக்கும் பெரிய நோய் போல சித்தரிக்க படுவது ஏன்?

இக்கால இளைஞர்கள் இந்நோயால் தாக்கபடுகிறார்கள் என்பது உண்மையா? பெரும்பாலான மருத்துவர்கள் இதற்கு மருத்துவம் செய்வதாக விளம்பரம் செய்கிறார்களே, அந்த அளவுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமா? ஆர்கன் டெவலப்பர் என்றால் என்ன? ஆணின் பிறப்பு உறுப்பின் நீளத்தை இதன் மூலம் அதிகரிக்க முடியுமா? முப்பது நாட்களில் இது சாத்தியமா? இளைனர் நலனில் அக்கறை உள்ள தங்களிடம் மிகவும் பணிவோடு இந்த கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

பதில்: நீங்கள் சொல்லும் இது போன்ற விளம்பங்களை நானும் பத்திரிகைகளின் வாயிலாக பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஆண்மைக்குறைவு என்ற நோய் இந்த அளவுக்கு விசுவரூபம் எடுக்கும் என்று நானும் எண்ணவில்லை. பத்திரிகைகளை புரட்டினாலும், டிவி சேனல்களை பார்த்தாலும் இது தான் கண்களில் படும் நிகழ்ச்சியாக காண கிடைகின்றது. ஆண்மை குறைவால் இந்த அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி தகவலாகும். இது போன்ற தவறான தகவல்களால் இளைஞர்கள் மனம் கலங்கி விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் .எல்லா மாணவர்களுக்கும் இப்போது முறையான மருத்துவ சோதனைகள் சிறப்பான மருத்துவர்களை கொண்டு நடத்தபடுகின்றன. உடலில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் இப்போது நவீன மருத்துவம் வாயிலாக நல்ல தீர்வும் உண்டு.அடிப்படையான எந்த பிரச்சினையாலும் சிறந்த சிகிச்சை முறைகள் உண்டு. மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளானவர்களே இந்த நோயால் அவதி படுகிறார்கள் என்பதே உண்மை. போதை மாத்திரைகளை உட்கொள்வது ,தவறான பெண்களுடன் உறவு கொள்வது, மது அருந்துவது போன்ற காரணங்களால் சில நேரங்களில் ஆண்மைக்குறைவு ஏற்பட வழியுண்டு.சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் இதை முழுமையாக குணா படுத்த முடியும். மன ரீதியான காரணங்களால் இது ஏற்பட்டால் நல்ல மனநல மருத்துவரை நாடினால் பயன் கிடைக்கும். 'ஆர்கன் டவ லெப்' என்று சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டமாகும். அறுவை சிகிச்சை மூலம் கூட இதனை பெரிய அளவில் சரி செய்து விட முடியாது. ஒரு காலம் வரலாம். அப்போது ஒரு வேளை உறுப்புமாற்று சிகிச்சை பலன் தரலாம்.

வயதை மீறிய மன வளர்ச்சியில் இக்கால குழந்தைகள்




கேள்வி: பண்டை காலங்களில் முத்தம் என்ற சொல்லை பயன்படுத்தவே பத்திரிகைகள் கூச்சப்படும். இது போன்ற சொற்களை எவரும் பயன் படுத்தினால் அவர்களை அருவருப்புடன் நோக்கிய காலம் ஓன்று இருந்தது. எங்கே முத்தம் கொடுப்பது என்று நேரடியாவே எழுதுகிறார்களே - இதை படிக்கின்ற இளைஞர்கள் கெட்டு போக மாட்டார்களா?

பதில்: இந்த கேள்வியை வைத்தே உங்கள் வயதை என்னால் சற்று யூகிக்க முடிகிறது. இப்போதுள்ள குழந்தைகள் இதை படித்து ஒன்றும் கெட்டு போகமாட்டார்கள். சினமாவிலும், டிவியிலும் இந்த காட்சிகளை தான் இக்கால சிறுவர்கள் கண்டு களிக்கிறார்கள்- அதுவும் பெற்றோர்கள் அருகில் இருந்தே பார்த்து ரசிக்கிறார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வயதானவர் நிலைக்கு இன்றைய குழந்தைகள் தள்ள படுகிறார்கள் என்பது தான் உண்மை. சிற்றின்ப, சல்லாப வார்தைகளின் அர்த்தங்கள் எல்லாம் பள்ளி சிறுவர்களுக்கு இப்போது அத்துபடியாகி விட்டது. பெரியவர்களுக்கே பாடம் சொல்லித்தரும் நிலையில் அவர்களின் இந்த அறிவு வளர்ந்து விட்டது. இது காலத்தின் பரிணாம வளர்ச்சியா அல்லது குழந்தைகளின் எதிர்கால வளமான வாழ்கையை மாசு படுத்தும் அபாய அறிவிப்பா என்பதை வரும்காலம் தான் உணர்த்த வேண்டும். குழந்தைகளை பொறுப்புள்ள நல்ல ஒரு குடிமகனாக உரு மாற்றும் திறன் தாய்- தந்தையிரின் கைகளில் தான் இருக்கிறது. எது நல் வழி, எது கெட்ட வழி என்பதை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சினிமா மோகமும் இளைனர்களும்



கேள்வி: இப்போது பத்திரிகைகளில் நடிகைகள் மிகவும் செக்ஸியாகவும், இளைனர்களின் உணர்சிகளை தூண்டும் விதத்திலும் பேட்டிகள் தருகிறார்களே - இதிலிருந்து இளைனர்களை பாதுகாப்பது எப்படி?

பதில்: பொதுவாகவே தமிழ் நாட்டு இளைஞர்கள் அதிக சினிமா மோகம் உள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோகத்தை சினிமா தயாரிப்பளர்களும், சில மீடியாக்களும் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறார்கள் என்பது தான் முழு உண்மை. எந்த மாநிலத்திலும் இந்த அளவு சினிமா மோகம் கொண்டவர்கள் இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் சினிமா நடிக-நடிகைகளுக்கு இந்த அளவு மரியாதை இல்லை. தமிழ் இளைனர்களின் இந்த சினிமா ஆசையை மேலும் தூண்டி விடுவதற்கே இது போன்ற கீழ் தரமான பேட்டிகளை பிரசுரிக்கிறார்கள். போத்திகிட்டா நடிக்கமுடியும் என்றால் என்ன அர்த்தம் - அந்த நடிகையை தான் கேட்க வேண்டும். நல்ல தரம் வாய்ந்த பத்திரிகைகளை இளம் மாணவர்கள் படிக்க பெற்றோர்களும் , ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.

தாயை போல பிள்ளை



கேள்வி: தாய்-தந்தையரின் நடத்தைகள், கெட்ட பழக்க வழக்கங்கள் குழந்தைகளை பாதிக்குமா? இதை தடுக்கும் வழிகள் என்ன?

பதில்: தாய் - தந்தையரின் நடத்தைகள் நிச்சயமாக குழந்தைகளை பாதிக்கும். தந்தையை விட தாயின் பழக்க-வழக்கங்களே குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. தாயின் அரவணைப்பில் எப்போதும் வளரும் ஒரு குழந்தையால் தன் தாயின் மன உணர்சிகளை வெகு எளிதில் புரிந்து கொள்ள இயலும். தாயின் எல்லா செயல்களும், நடவடிக்கைகளும் குழந்தையின் அடி மனதில் மிக ஆழமாக பதிந்து விடுகின்றன. அறிந்து கொள்ள இயலாத சிறு பிள்ளை பருவத்தில் நிகழும் இந்த உணர்வுகள் வடுக்களாக மாறி விடுகின்றன. ஆழ் மனதில் நிகழும் இந்த ரசாயன மாற்றங்கள் பின்னாளில் வளரும் குழந்தைகளின் ஹார்மோன்களை தட்டி விட அவை வளரும் குழந்தைகளின் மனதிலும், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை புரிந்து குழந்தைகளை வளர்க்க தெரியாத பெற்றோர்களின் குழந்தைகளே, வளர்ந்து வாலிபன் ஆன பின்னர் அதிக மன உளைச்சலுக்கு ஆட்படுகின்றனர். தாய்-தந்தையரின் ஆக்ரோசமான சண்டை காட்சிகள் சிறு குழந்தைகளை மிகவும் கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இது போன்ற விசயங்களில் நாகரிக சூழலில் வாழும் இளம் தம்பதியர் அதிக கவனமுடன் இருப்பது நல்லது.

படிப்பில் சிறந்து விளங்குவது மாணவியா அல்லது மாணவனா?




கேள்வி: இப்போதுள்ள மாணவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கு என்ன காரணம்? பெண் குழந்தைகள் மாணவர்களை விட நன்றாக படிக்கிறார்களே இது எதனால்? மாணவர்களின் கவனம் படிப்பில் சிதறுவதற்கு என்ன காரணம்? இதை சரி செய்வது எப்படி?

பதில்:நீங்கள் சொல்வது உண்மைதான். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஐந்து மாணவிகளே முதல் இடத்தை பிடித்து உள்ளனர். மாணவிகள் பொதுவாகவே கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.இந்த ஆர்வம் பொதுவாக மாணவர்களிடம் இப்போது இல்லை. நவீன சூழலில் வாழும் இக்கால இளைஞர்கள் படிப்பில் அதிக ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். சினிமா,இன்டர்நெட், மொபைல் காதல் வலைகளில் சிக்கி தடுமாறுகின்றனர். காதலிப்பது என்பது ஒரு கௌரவ பிரட்சினையாக மாணவர்களிடம் ஏற்பட்டு விட்டது. நண்பர்களின் சகவாசமும் அவர்கள் கொடுக்கும் ஆதரவும் இதற்கு பெரும் துணையாக அமைகிறது. பெற்றோர்களின் எந்த அறிவுரையும் இவர்கள் காதுகளில் ஏறுவதில்லை. படிப்பில்லாமல் கூட வாழ முடியும் என்ற சித்தாங்கம் இவர்களை ஆட்டுவிக்கிறது. இது இப்போது எல்லா மட்ட மாணவர்களையும் பாதிக்க துவங்கி விட்டது.பெரும்பாலான பெற்றோர்களை துயருக்கு உள்ளாக்கும் ஒரு அவல நிலையாக இது மாறிவிட்டது. எந்த மாணவனையும் பெற்றோர்களால் கட்டுபடுத்த இயலவில்லை. இளம் மாணவர் நலனில் அக்கறை காட்டும் கல்வியாளர் மத்தியில் இது இப்போது ஒரு கேள்விக்குறியாகவே ஆகி விட்டது. மனநல மருத்துவர்களை இது போன்ற பிரட்சினைகளுக்காக, பெற்றோர்கள் நாடுவது இப்போது சகஜம் ஆகிவிட்டது. நல்ல ஆலோசனைகள் மூலமும், சிறந்த பயிற்சிகளின் மூலமும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த இயலும்.

படைப்பாற்றலை வளர்ப்பது எப்படி




கேள்வி: இக்காலத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிக மார்க் எடுத்து முன்னிலை வகிக்கிரார்களே இது எதனால்? கல்வி கற்கும் திறனுக்கும் பெண்களின் மூளைக்கும் எதுவும் சம்பந்தம் உண்டா? அல்லது படிக்கும் ஆற்றலில் மட்டும் தான் பெண்கள் சிறந்து விளன்குகிறார்களா? மற்ற ஆற்றல்கள் அவர்களிடம் மிகவும் குறைவா?

பதில்:போட்டி அதிகம் மிகுந்த இந்நாட்களில் ஆண்களுக்கு சமமாக அல்லது ஆண்களை விட அதிகமாக தன்னம்பிக்கையும் , திறமையும் உள்ளவர்களாக பெண்கள் திகழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.அரசியல்,சயின்ஸ்,மருத்துவம்,பொறி இயல்,கம்ப்யூட்டர் என்று அவர்கள் கால் பதிக்காத துறைகளே இப்போது இல்லை எனலாம்.மனித அறிவாற்றலை பல விதமாக வகை படுத்தலாம். கல்வி திறனை அல்லது ஞாபக சக்தியை அதிகம் வளர்க்க உதவும் இடது பக்க மூளை பகுதியை இவர்களால் தூண்ட இயலும் என்பதும் ஒரு காரணம். வலது பக்க மூளையானது கிரியேடிவாக செயல் படும் ஆற்றல் உள்ளது. இது ஆண்களுக்கு சற்று அதிகம் என்று கூறலாம். இதனாலயே படைப்பாற்றல் அதிகம் உள்ளவர்களாக மாணவர்கள் விளங்குகிறார்கள். தலை சிறந்த இயக்குனர்கள்,கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள்,ஓவியர்கள்,கட்டடக்கலை நிபுணர்கள், மற்றும் பெரும் மேதைகளாக ஆண்கள் இருப்பதற்கும் இதுவே காரணம். பில் கேட்ஸ் கல்லூரி படிப்பை தொடராமல் விட்டதற்கும், ஆப்பிள் கம்ப்யூட்டர் இஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் இருந்து விலகியதற்கும் அவர்களின் படைப்பு திறனே காரணம். எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்த எடிசன் பள்ளி படிப்பை கூட தொடாதவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.படிப்பில் அதிக சாதனைகளை நிகழ்த்த விரும்புவோர் இடது பக்க மூளையை அதிகம் தூண்ட உதவும் சில பயிற்சிகளை மேற்கொண்டால் போதும். டீன் ஏஜ் மருத்துவர்களை தொடர்பு கொண்டால் இதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.

படிக்காத பெற்றோரும் புத்திசாலி பிள்ளைகளும்



கேள்வி: படித்த பெற்றோர்களின் குழந்தைகள் தான் நன்கு படித்து வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்பது உண்மையா?

பதில்: நிச்சயமாக இது உண்மை இல்லை. படிக்காத பெற்றோர்களுக்கு பிறந்த ஏராளமான குழந்தைகள் நன்கு படித்து வாழ்வில் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறார்கள் என்பது தான் முழு உண்மை. முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். நான் சந்தித்த ஏராளமான ஐ.எ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெற்றோர்கள் பெரிய படிப்பு படித்தவர்களாக இல்லை. மேலும் அவர்களில் பெரும்பாலோர் எளிய குடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.இதில் அதிசயம் என்னவென்றால் இந்த பெரிய அதிகாரிகளின் பிள்ளைகள் எவருமே ஐ. எ.எஸ். ஆகவோ அல்லது ஐ.பி. எஸ். ஆகவோ இல்லை. பெரும்பாலான அதிகாரிகளின் குழந்தைகள் டாக்டர் அல்லது எஞ்சினீர் போன்ற துறைகளையே தேர்வு செய்கின்றனர். துப்புரவு தொழிலாளியின் மகன் முதல் இடமும், ஆட்டோ டிரைவரின் மகள் இரண்டாம் இடமும் பெற்று கல்வியில் உயர்ந்து விளங்குவது வியப்பான விஷயம் இல்லை என்றாலும் மகிழ்ந்து பாராட்ட தக்கது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த குழந்தைகள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

மாணவர்களும் படிக்கும் ஆற்றலும்




கேள்வி: சாதாரணமாக கணிதத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பது என்பது மிக குறைந்தே காணப்பட்டது. ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கிறார்களே இது எப்படி. கல்வி திறன் உயர்ந்ததாலா அல்லது மாணவர்களின் அறிவு திறன் வளர்ந்ததாலா?

பதில்: கல்வி திறன் உயர்ந்ததால் என்று இதை கூற இயலாது. காரணம் கல்வி திறன் உயர்ந்து இருந்தால் தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுமே மிகுந்த மதிப்பெண்களை பெற்று இருக்க முடியும். ஆனால் திறமையும் அதிக அளவு அறிவு திறனும் உள்ள மாணவர்களே நூறு மார்க்கை பெற்று இருக்கிறார்கள். இன்றய மாணவர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்களும் நன்கு படித்த வர்களாக இருப்பது இதற்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. பொறுப்புணர்வுடன் வளரும் குழந்தைகளால் மட்டுமே இதை சாதிக்க இயலும். கல்வி அறிவு என்பது பிறர் தூண்டி வருவது இல்லை, அது இயல்பாக வருவது - தானாக வளர்வது. சாதிக்க நினைக்கும் மனம் இருந்தால் போதும்.

படிப்பும் பதவியும்




கேள்வி: மாணவர்களின் கல்வி இப்போது கேள்வி குறியாகி உள்ள சூழலில், எந்த கல்வியை கற்றால் மாணவனின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று உறுதியாக கூற இயலவில்லை. டாக்டருக்கு படிக்க வைக்கலாம், என்ஜினீயருக்கு படிக்க வைக்கலாம் என்று இப்போது எல்லோரும் அலைகிறார்கள். படிப்பு இல்லாமல் இருந்தால் மந்திரியாகலாம் என்று இப்போதுள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில்: இன்றைய கால கட்டத்தில் கல்வி கற்காமல் எந்த நல்ல பணியிலும் சேர இயலாது.பியூன் வேலைக்கு கூட கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்த நம் நாட்டில் பிரதமர் ஆவதற்கும், முதல்வர் ஆவதற்கும், கவர்னர் ஆவதற்கும் கல்வி தகுதி அவசியமில்லை. தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. "டீ கடைக்காரர் நிதி அமைச்சர் ஆனார் என்றும், மாடு மேய்த்தவர் கால்நடை அமைச்சர் ஆனார் " என்பதுதான் அந்த செய்தி. எனக்கு கூட படிப்பின் மீது இருந்த ஆர்வம் இப்போது மிகவும் குறைந்து விட்டது. வீட்டில், படிக்காத பிள்ளைகளை "போய் மாடு மேய்" என்று சொல்வார்கள். அது இப்போது உண்மை ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, மாடு மேய்த்தால் அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கை கூட எல்லோருக்கும் வந்து விட்டது. சினிமாவும் அரசியலும் கை கோர்த்து விட்டதால் கல்வியின் மீது இருந்த மரியாதை தமிழ் இளைனர்களின் மனதில் இருந்து மெல்ல மெல்ல விலகி ஓடுகிறது என்பது உண்மை தான். சமூக ஆர்வலர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இந்த அவலத்தை சீர் செய்வதில் மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

உயிரை இழக்கும் இளம் கணவன்-மனைவியர்




கேள்வி:குடும்ப தகராறு காரணமாக இளம் கணவன்-மனைவியர் தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்களே,இதற்கு மருத்துவ ரீதியாக எந்த பரிகாரமும் கிடையாதா?

பதில்: உயிரை மாய்த்து கொள்வது என்பது தன்னிச்சையாக எடுத்த ஒரு அவசர முடிவு.கணவன் மனைவி பிரச்சினை என்பது எல்லா குடும்பங்களிலும் உள்ள ஒரு சாதாரண சம்பவம் தான். இதற்காக உயிரையே பலி இடுவது என்பது ஏற்றுகொள்ளும் செயலாக தோன்றவில்லை. நவீன கால சூழலில் பேசி தீர்பதற்கான எவ்வளவோ வழிமுறைகள் இருகின்றன. இதை விடுத்து தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு என்று பல மன நல மருத்துவ மையங்கள் உள்ளன. பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருத்துவ மையங்களை அணுகி ஆலோசனைகளை பெறுவது நல்லது. வருமுன் காப்பது என்றும் நலம் பயக்கும்.

இசையும் குழந்தை வளர்ச்சியும்



கேள்வி: நல்ல இசையை செவிமடுக்கும் குழந்தைகள் நல்ல மூளை திறன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்ற செய்தி உண்மையா?

பதில்: இது முற்றிலும் உண்மைதான். விண்ணான பூர்வமாக மேல் நாடுகளில் செய்த ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. தாய்மை அடைந்த பெண்கள் கூட நல்ல இனிமையான இசையை சில குறிப்பிட்ட நேரங்களில் தொடர்ந்து கேட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல பலன்கள் ஏற்படும். தாயின் மன மற்றும் உடல் சோர்வையும் போக்கும் திறன் சிறந்த இசைக்கு உண்டு.

நவீன கால இளம் தம்பதிகள்



கேள்வி: இன்றைய இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் மனைவியர் கெட்டு போவதற்கு காரணம் யார்? பெற்றோர்களா அல்லது கணவன்மார்களா?

பதில்: மனநல வல்லுனர்களாலேயே இது போன்ற பிரட்சினைகளுக்கு இப்போது காரணம் கண்டு பிடிக்க இயல வில்லை.மாறிவரும் சமூக சூழல் பெண்களையும் இப்போது வித்தியாசமாக சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகிறது.சுயமாக சம்பாதிக்கும் பெண் இப்போது சுயமாக தன் சொந்த விசயங்களில் முடிவு எடுக்கவும் முயற்சி செய்கிறாள். இது பல நேரங்களில் விபரீத முடிவுகளில் கொண்டு போய் சேர்க்கிறது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட பல ஆண்களிடம் தொடர்பு வைத்திரிந்ததால், தன் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இளைனர்களும் சபலங்களும்




கேள்வி: கட்டுபாடான நமது நாட்டில் இப்போது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மிகவும் அதிக அளவில் நடப்பதற்கு என்ன காரணம்.வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று நினைகிறீர்கள்?

பதில்: பக்கத்தில் உள்ள பத்திரிகை செய்தி இதற்கு ஒரு சான்று. பத்திரிகை செய்தியை நான் சொல்வதற்கு காரணம், இவை தான் நாட்டில் நடக்கும் நடப்புகளை, அவல நிலைகளை மக்களுக்கு படம் பிடித்து காட்டும் கண்ணாடிகளாக இப்போது உள்ளன. இளைனர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இப்போதைய சினிமா காட்சிகள் உள்ளன. மொபைல் போன் மூலம் பரிமாறும் செக்ஸ் தகவல்கள், இணையத்தளம் ஏற்படுத்தும் தாக்கம் இன்றைய இளைனர்களின் மன இயல்புகளை மிகவும் பாதிக்கின்றன. வேலைக்கு செல்லும் இன்றைய பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் செயல் பாடுகளில் அதிக கவனம் செலுத்த இயலுவதில்லை.பெண்களின் மிகையான ஆடை அலங்காரங்களும் கூட இளைனர்களின் மனதை மேலும் கெடுக்க வழி செய்கின்றன.உண்மை எது,பொய் எது என்று இனம் பிரித்து பார்க்க இயலாத பருவத்தில் வாழும் இளைஞர்கள் எளிதில் கீழான சபலத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.இது போன்ற அவலமான செயல்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வலிமை பெற்றோர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை தாய் தந்தையர் உணர்ந்து செயல் பட வேண்டும்.

Wednesday 20 July, 2011

குழந்தைகள் கெட்டு போக யார் காரணம்



தாயின் ஒழுக்கம் குழந்தைகளை பாதிக்குமா?

தமிழில் நல்ல ஒரு பழமொழி உண்டு. "நூலை போல சேலை, தாயை போல பிள்ளை" அது போல தாய் தந்தையிரின் குண இயல்புகளும், பழக்க வழக்கங்களும் சிறு குழந்தைகளையும், நன்கு வளர்ந்த இளைனர்களையும் வெகுவாக மனதளவில் பாதிக்கின்றன.தமிழ் பத்திரிகை ஒன்றில் வந்த இந்த செய்தியை சற்று கூர்ந்து படியுங்கள், நான் அதிகம் சொல்லாமலே உங்களுக்கு புரியும். டுயூசனுக்கு வந்த மாணவியின் தாயாருடன் ஆசிரியர் ஓடினால் நாம் பதறுவது இருக்கட்டும் , இந்த இளம் மாணவியின் மன நிலை என்னாகும். இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தாய்மார்களே இவ்வாறு துணிந்து தவறு செய்தால் இந்த குழந்தைகளை கடினமான மன அதிர்வுகளில் இருந்து எப்படி காப்பாற்ற இயலும்.

Monday 4 July, 2011




கேள்வி: பெரிய மற்றும் சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டும் தான் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனைகள் படைக்க இயலும் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

மாணவர்கள் சாதனை படைப்பது என்பது சிறந்த தனியார் பள்ளிகளில் படிப்பதினால் மட்டும் ஏற்பட்டு விடுவதில்லை. இது மாணவர்களின் தனிப்பட்ட திறனையும் அவர்களின் அடிப்படை ஆற்றலையும் அடிப்படையாக கொண்டு அமைகிறது.பெற்றவர்கள் கொடுக்கும் ஊக்கமும், ஆசிரியர்களின் சிறந்த ஆக்கமும் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

வீட்டு வேலை செய்யும் சாதாரண பெண்ணின் மகன் கூட முயன்றால் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைக்க இயலும் என்பதை செய்தி தாள்கள் படம் பிடித்து காட்டுகின்றன. ஒரு மாணவன் முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதே எனது தீர்க்கமான கருத்து.

Friday 1 July, 2011

இளைனர்களும் மன உணர்ச்சிகளும்



இன்றைய இளைனர்களின் இயல்பான சுய முயற்சிகள் தோல்வி அடைவதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் என்கிறார்களே - இது உண்மையா?

குழந்தைகளின் சுய முயற்ச்சிகள் தகர்த்து எறியப்படுகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கம் தரப்படுவதில்லை. அவர்களின் திறமைகள் ஊட்டி வளர்க்க படுவதில்லை. குழந்தை எப்படி வர வேண்டும் அல்லது வளர வேண்டும் என்பதை மற்றவர்கள் நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையில் இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வாழ்கிறார்கள்.

வளரும் இளைனர்களின் மன இயல்புகளை அப்படியே படம் பிடித்து கட்டுகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

கூச்சம் சந்தேகம் மற்றும் பொறாமை



கூச்சம், சந்தேகம், பொறாமை போன்ற தீய உணர்வுகள் குழந்தைகளையும் பாதிக்குமா? இதை கண்டறிவது எப்படி?

கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் எளிதில் கண்டறியப்பட்டால், அவர்களின் குண இயல்பை விரைவில் சீர் செய்ய இயலும். இல்லையெனில் வளர்ந்து வாலிபன் ஆன பின்னும் இந்த சுபாவம் தொடரும். பின்னாளில் இந்த சுபாவம் சந்தேகம், பொறாமை, ஆற்றாமை போன்ற மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இக்கால இளம் வாலிப ஆண் மற்றும் பெண்களின் மன இயல்புகள் , உணர்வுகள் பற்றி மிகவும் விரிவாக விளக்குகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.