
கேள்வி: காதல் திருமணம் புரிந்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மகளின் கணவனையே கொலை செய்து விடும் அளவுக்கு தாய்-தந்தையாரின் நெஞ்சம் கடினமாகி விடுமா? பெற்றோர் குறிப்பிடும் வரனை திருமணம் செய்தால் தான் 'பாசம்' நிலைக்குமா? இக்கால சூழ்நிலையில் தாய்-தந்தையர் எவ்வாறு நடந்து கொள்வது நன்று என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.
பதில்: காதல், திருமணம் வரை செல்கிறது என்றால் அதில் தெளிவான நோக்கம் இருக்கிறது என்று பொருள். அதுவும் மணம் புரிய விளையும் காதலர்கள் நன்கு படித்தவர்கள் என்றால், ஒரு நல்ல மணவாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு. நல்ல படித்த, பண்பான ஒருவன் தன் மகளுக்கு மணமகனாக வர வேண்டும் என்றே எந்த பண்புள்ள தாய்-தந்தையரும் விரும்புவர். நல்ல வரன்களை பிறர் அறிந்து சொல்வதை விட, மனம் ஒத்த வாழ்க்கை துணையை மகனோ அல்லது மகளோ தேர்ந்து எடுத்தால், அதை ஆராய்ந்து பார்த்து, தங்களின் குழந்தைகளின் எதிர்கால வளமான வாழ்வுக்கு, இது ஊறு விளைவிக்காது என்று அறிந்தால் அந்த திருமணத்தை உறுதிபடுத்துவதும் அதை முறையாக நடத்தி கொடுப்பதும் தான் இக்கால சூழலுக்கு பொருந்துவதாகும். விட்டு கொடுக்கும் மனபான்மையும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் தக்கவாறு தங்களின் கடின சித்தாந்தத்தை சற்று தளர்த்தி கொள்ளும் மன பக்குவமும் இக்கால பெற்றோர்களுக்கு அவசியம் தேவை. படித்த பெண்கள் கை நிறைய சம்பாதிக்கும் இன்றைய கால கட்டத்தில் அவர்கள் விரும்பும் வாழ்கை துணையை அவர்களுக்கு வழங்குவதில் எந்த தவறுமில்லை. பெற்றோர் தேர்ந்தெடுக்கும் வரன்கள் முழுவதும் வெற்றியில் முடிந்ததாக எந்த வரலாறுமில்லை. அதுபோலவே எல்லா காதல் திருமணங்களும் தோல்வியில் முடிந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த விசயங்களில் பெற்றோர் நிதானமாக யோசித்து, பொறுப்புடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். தவறான முடிவுகள் அனைவரது வாழ்க்கையையும் பாழ்படுத்தி விடும். குடும்ப அமைதியும், ஆனந்தத்தையும் கெடுத்துவிடும்.